தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு துறை வீரர் பலி


தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு துறை வீரர் பலி
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தில் பரிதாபம் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு துறை வீரர் பலி

குன்னம்,

குன்னத்தில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு துறை வீரர் பலியானார்.

தடுப்பு சுவரில்...

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே டி.மைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை வீரரான இவர் தீயணைப்பு நிலைய எழுத்தராகவும் பணியாற்றி வந்தார். அலுவலக பணி நிமித்தமாக பெரம்பலூருக்கு வந்த ராஜதுரை, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் நிலையம் அருகே வந்த போது ராஜதுரையின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கதறல்

விபத்தில் இறந்த ராஜதுரைக்கு ஜெமீனா (26) என்ற மனைவி உள்ளார். தற்போது ஜெமீனா கர்ப்பமாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். விபத்தில் ராஜதுரை இறந்தது குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ஜெமீனா மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அப்போது ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ஆறுதல் கூறினர்.

இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தீயணைப்பு நிலைய எழுத்தர் இறந்த சம்பவம் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தீயணைப்பு படைவீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story