கிருஷ்ணாராவ் பதவி விலகக்கோரி சட்டசபையை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கைது


கிருஷ்ணாராவ் பதவி விலகக்கோரி சட்டசபையை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கைது
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலகக்கோரி சட்டசபையை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தபோது ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் 3 பேர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியது.

இந்தநிலையில் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலகக் கோரி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் அணி தலைவர் விஜய சைலேந்தர் தலைமை தாங்கினார். மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

சட்டசபைக்கு வந்தனர்


இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், இளைஞர் அணி நிர்வாகிகள் மோகன் கமல், மகேஷ், பிரகாஷ், வேல்முருகன், ஜெகன், வடிவேல், அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டசபை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தும் விதமாக அங்கிருந்து சட்டசபையை நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுப்பு கட்டைகளை (பேரிகார்டு) அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் அவற்றை தள்ளிவிட்டும், அதன் மீது ஏறிக்குதித்தும் சட்டசபையை நோக்கி வந்தனர்.

தள்ளுமுள்ளு, கைது


பாரதீய ஜனதா கட்சியினர் சட்டசபையை நோக்கி வருவதை கண்டதும் சபைக்காவலர்கள் சட்டசபையின் பிரதான நுழைவாயில் கதவுகளை இழுத்து மூடினார்கள். இதனால் சட்டசபையில் இருந்து வாகனங்கள் வெளியேறும் வாசல் முன்பு அமர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலகக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சட்டசபை முன் முற்றுகையில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 50–க்கும் மேற்பட்டோரை கைது செய்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். அப்போது பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.

இதன்பின் கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினரை போலீஸ் பஸ்சில் ஏற்றிச் சென்று கரிக்குடோனில் தங்கவைத்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story