மும்பையில் பட்டப்பகலில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளை 4 பேருக்கு வலைவீச்சு


மும்பையில் பட்டப்பகலில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளை 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்பை,

மும்பை தாராவியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஏ.டி.எம். மையம்

மும்பை தாராவி சயான்– பாந்திரா லிங் சாலையில் ஓ.என்.ஜி.சி. கட்டிடத்துக்கு எதிரே முகுந்த்நகர் உள்ளது. இங்கு பிரியதர்‌ஷன் என்ற கட்டிடத்தின் தரை தளத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 3 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்துக்கு பணம் நிரப்ப வேனில் ஊழியர்கள் வந்தனர்.

வேனை பாந்திரா– சயான் செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு, சாலை தடுப்புச்சுவரை கடந்து பணப்பெட்டியை எடுத்து கொண்டு ஏ.டி.எம். மையத்துக்குள் 3 ஊழியர்களும், ஒரு பாதுகாவலரும் சென்றனர். பணப்பெட்டியை வைத்திருந்த வேனில் அதன் டிரைவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல், அந்த வேனுக்கு கீழே ரூபாய் நோட்டுகளை வீசியது.

டிரைவரின் கவனத்தை திசைதிருப்பி...

பின்னர், டிரைவரிடம் சென்று வேனுக்கு கீழே ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடப்பதாக கூறினர். இதனை நம்பிய டிரைவர், வேன் அடியில் சென்று ரூபாய் நோட்டுகளை எடுத்தார். இந்த சமயத்தில், அந்த 4 பேர் கும்பல் வேனில் இருந்த பணப்பெட்டியை கொள்ளையடித்து கொண்டு, அதே பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்றனர்.

மர்ம கும்பல் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி, வேனில் இருந்த பணப்பெட்டியை கொள்ளையடித்து சென்றதை உணர்ந்த டிரைவர், அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக ஏ.டி.எம். மையத்துக்குள் ஓடிச்சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் விவரத்தை கூறினார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரூ.1½ கோடி கொள்ளை

இதில், ரூ.1 கோடியே 56 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளை கும்பல் வேனில் இருந்து பணப்பெட்டியை எடுத்து சென்ற காட்சி, அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார், கொள்ளையர்கள் 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் ஏ.எடி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில், அரங்கேற்றப்பட்ட இந்த துணிகர கொள்ளை சம்பவம் தாராவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story