நாசிக்கில் 3,664 பேரிடம் ரூ.31 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர் மும்பையில் கைது 7 மாதத்திற்கு பிறகு சிக்கினார்


நாசிக்கில் 3,664 பேரிடம் ரூ.31 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர் மும்பையில் கைது 7 மாதத்திற்கு பிறகு சிக்கினார்
x
தினத்தந்தி 17 March 2017 3:54 AM IST (Updated: 17 March 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்கில் நிதி நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்து 664 பேரிடம் ரூ.31 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான நிதி நிறுவன இயக்குனர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நாசிக்கில் நிதி நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்து 664 பேரிடம் ரூ.31 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான நிதி நிறுவன இயக்குனர் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவர் 7 மாதத்திற்கு பிறகு போலீசில் சிக்கினார்.

ரூ.31 கோடி மோசடி

நாசிக், கங்காபூர் சாலையில் ‘‘ஹவுஸ் ஆப் இன்வெஸ்ட்மெண்ட்’’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. தங்களிடம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டியுடன் பணம் திருப்பி தரப்படும் என்று அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதை நம்பி ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். இந்தநிலையில், திடீரென கடந்த ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அலுவலகத்தை மூடிவிட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். நிதி நிறுவனத்தின் முன் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுபற்றி கங்காப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த நிறுவனம் 3 ஆயிரத்து 664 பேரிடம் ரூ.31 கோடி மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

நிதி நிறுவன இயக்குனர் கைது

இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணத்துடன் தலைமறைவான நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் வினோத் பாட்டீல்(வயது28) போலீசாரிடம் சிக்காமல் இருந்தார். போலீசார் அவரை 7 மாதமாக வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவர் மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுபற்றி நாசிக் போலீசார் பாந்திரா கேர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கேர்வாடி போலீசார் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று நேற்று முன்தினம் வினோத் பாட்டீலை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று விசாரணைக்காக நாசிக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story