பர்கூர் அருகே 2–வது முறையாக எருதுவிடும் விழாவுக்கு தடை பொதுமக்கள் சாலைமறியல்


பர்கூர் அருகே 2–வது முறையாக எருதுவிடும் விழாவுக்கு தடை பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 7:00 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே 2–வது முறையாக எருதுவிடும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

பர்கூர்,

எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில் 25–வது எருது விடும் விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மருதேப்பள்ளி கிராமத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் விழா நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் மருதேப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி மறுத்தனர். இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் விழா நடத்த அனுமதி மறுத்தனர். தற்போது 2–வது முறையாகவும் எருதுவிடும் விழா நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.

பொதுமக்கள் சாலைமறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொகரப்பள்ளி செல்லும் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுட்டனர்.

பின்னர் ஓரிரு நாட்களில் விழா நடத்த அனுமதி வழங்குவதாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக இந்த எருது விடும் விழாவில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 காளைகள் கொண்டு வரப்பட்டன.

அவ்வாறு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட காளைகளை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் இந்த கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story