மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்தம் நாமக்கல்லில் மறியல் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி வேண்டும், தேர்தல் பணி நேரத்தில் இதர பணிகளை நிறுத்த வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதில் மாவட்டம் முழுவதும் 18 பெண்கள் உள்பட 148 பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. அங்கு நடைபெறும் பணிகளும் பாதிக்கப்பட்டன.
மறியல் போராட்டம்இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும், வளர்ச்சி துறையில் கணக்கு தேர்விற்காக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக கூறினர்.