மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வந்தது. அதன்பிறகு குளிர் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இதன் தாக்கத்தை காலை 7 மணிக்கே உணர முடிந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தாகத்தை தணிக்க இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறுகளை பருகி வருகின்றனர். கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் அனல் காற்று வீச தொடங்கி விட்டது.
பொதுமக்கள் அவதிஇதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க சிலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடங்க தொடங்கி விட்டனர். மேலும் சாலையில் சென்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட பலரும் குடைபிடித்த படி சென்றதை பார்க்க முடிந்தது.
வாகனங்களில் செல்வோர் தொப்பி அணிந்த படியும், கண் கண்ணாடிகள் அணிந்தும், முகத்தை துணியால் மூடியபடியும் செல்கின்றனர். பாதசாரிகள் வேர்த்து மிகவும் சிரமப்பட்டு சென்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகளை பொதுமக்கள் நாடிச்செல்கின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. குறிப்பாக பழச்சாறு, கரும்புச்சாறு கடைகளில் அதிக அளவு கூட்டம் இருந்தது.