20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 175 பேர் கைது


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 175 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 7:47 PM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல்

கடலூர்,

காலவரையற்ற போராட்டம்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலி பணியிடங்களை பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இவர்களுக்கான பணி மாறுதல்கள் வெளிப்படை தன்மையோடு பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முற்றுகை

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்துடன் பேரணி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4–வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, வட்டார இணை செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட இணை செயலாளர் செல்வம், உணவு பாதுகாப்புத்துறை மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

175 பேர் கைது

அதைத்தொடர்ந்து அனைவரும் கோரிக்கைகளை விளக்கி கோ‌ஷங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள குண்டுசாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடன் அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 15 பெண்கள் உள்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story