4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல் 24 பெண்கள் உள்பட 200 பேர் கைது


4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல் 24 பெண்கள் உள்பட 200 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 7:53 PM IST)
t-max-icont-min-icon

4–வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4–வது நாளாகவும் இந்த போராட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்டபடி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவி இயக்குனர் பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அளவீட்டிற்கான நுட்ப மதிப்பீட்டை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை நியமித்திட உள்ள தடையினை நீக்கி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

1,200 பேர் பங்கேற்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உள்பட 1,200 பேர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் செயலாளர் கை.கோவிந்தராஜன், மாநில துணைத்தலைவர் புஷ்பராஜன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர்கள் ரெங்கசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையிலும் தஞ்சை இர்வீன்பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 பேர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சாலைபணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் என 24 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story