திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரருக்கு சிறை தண்டனை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரருக்கு சிறை தண்டனை
விழுப்புரம்,
திருக்கோவிலூர் அருகே முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியபிரான்சிஸ் மகன் மரியலியோ அமுதன் (வயது 28). இவரும் அதேஊரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
அப்போது அந்த பெண்ணிடம் மரியலியோ அமுதன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த பெண், மரியலியோ அமுதனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் மரியலியோ அமுதன், முகையூர் பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ராணுவ வீரருக்கு சிறை தண்டனைஇதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தபெண், தன்னை காதலித்து விட்டு ஏமாற்றிய மரியலியோ அமுதன் மீது கடந்த 19.11.11 அன்று அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியலியோ அமுதனை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, குற்றம் சாட்டப்பட்ட மரியலியோ அமுதனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட மரியலியோ அமுதன் தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.