விபத்தில் பலியான சிறுவனின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பலியான சிறுவனின் பெற்றோருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் ஜான்போஸ்கோ(வயது 16). இவன் கடந்த 14.6.2000 அன்று உளுந்தூர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சேலம்–சென்னை சாலையில் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த ஈரோடு கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பஸ், மாட்டுவண்டி மீது மோதியது. இதில் ஜான்போஸ்கோ சம்பவ இடத்திலேயே இறந்தான். இதுகுறித்து அவனுடைய பெற்றோர் குழந்தைசாமி–ரீத்தா ஆகியோர் வக்கீல் தண்டபாணி மூலம் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி விழுப்புரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் பலியான ஜான்போஸ்கோவின் பெற்றொருக்கு 2 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்கவேண்டும் என்று ஈரோடு கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை.
அரசு பஸ் ஜப்திஇதனால் பாதிக்கப்பட்ட குழந்தைசாமி விழுப்புரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, ஜான்போஸ்கோவின் பெற்றோருக்கு நஷ்டஈடு தொகையாக வட்டியுடன் சேர்த்து 4 லட்சத்து 89 ஆயிரத்து 12 ரூபாயை 23.2.2017 அன்றுக்குள் போக்குவரத்துக்கழகம் வழங்கவேண்டும் எனவும், தவறினால் பஸ்சை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டார். இருப்பினும் சிறுவனின் பெற்றோருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதையடுத்து உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்துக்கு வந்த ஈரோடு கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர்.