ராணிப்பேட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கோட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
இடகுப்பம் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், வாலாஜா நகர துணை தலைவர் சதீஷ், ஆட்டோ சங்க தலைவர் உமாபதி, சரவணன் உள்பட இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராணிப்பேட்டை உதவி கலெக்டர் ராஜலட்சுமியிடம் இந்து முன்னணி அமைப்பினர் வழங்கினர்.
அந்த மனுவில், ‘வாலாஜாவை அடுத்த அனந்தலை ஊராட்சிக்குட்பட்ட இடகுப்பம் கிராமத்தில் உள்ள மலையில் அம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், நந்திமீது சிவன் காட்சி அளித்தல், அரிய வகை ஒலி எழுப்பும் பாறைகள் ஆகியவை உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு கல்குவாரி செயல்படுகிறது. இங்கு பயன்படுத்தும் வெடிபொருட்களால் மலையை சுற்றியுள்ள அனந்தலை, இடகுப்பம், தகரகுப்பம், செங்காடு போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, இடகுப்பம் கிராமத்தில் மலைகள் மீது செயல்படும் கல்குவாரிகளை மூடி மலைமேல் அமைந்துள்ள சுனைகளையும், கோவில்களையும் மற்றும் புராதன சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும். மலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். இல்லை எனில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணிசார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.