ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலைமறியல் போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலைமறியல் போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2017 3:00 AM IST (Updated: 17 March 2017 8:11 PM IST)
t-max-icont-min-icon

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

வேலூர்,

கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களையவேண்டும். பொறியாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம், உதவி இயக்குனர் உள்ளிட்ட காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சாலைமறியல்

வேலைநிறுத்தம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை வெறிச்சோடி கிடக்கின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோசப்கென்னடி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மோகன் உள்பட 130 பேர் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.



Next Story