ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியல் 286 பேர் கைது


ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியல் 286 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 3:00 AM IST (Updated: 17 March 2017 8:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 286 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 286 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு பட்டியல் வரம்பை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 14, 15–ந் தேதிகளில் அலுவலக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். 3–வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதையொட்டி அண்ணாசிலை அருகே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணி முதல் ஊரக வளர்ச்சி துறையினர் ஒவ்வொருவராக அண்ணாசிலையின் அருகே வரத் தொடங்கினார்கள். 11–30 மணியளவில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் அண்ணா சிலை முன்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து மாற்றப்பட்டது. போலீசார் சாலை மறியலை கைவிடும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

286 பேர் கைது

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். பின்னர் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த 16 பெண்கள் உள்பட 286 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித்துறையினர் அலுவலர்கள் சங்கத்தினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.



Next Story