அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.95 லட்சம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் முடிந்ததும் எண்ணப்படுவது வழக்கம்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் முடிந்ததும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் கடந்த 11–ந் தேதி இரவு 8–58 மணிக்கு தொடங்கி 12–ந் தேதி இரவு 8–52 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பவுர்ணமி கிரிவலம் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் உண்டியல் காணிக்கைகள் நேற்று எண்ணப்பட்டன. கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் இருந்த 52 உண்டியல்கள் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா முன்னிலையில் திறக்கப்பட்டன.
பின்னர் காணிக்கைகள் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.95 லட்சத்து 17 ஆயிரத்து 297–யும், 252 கிராம் தங்கமும், 1 கிலோ 175 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.