பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு: காணொலி காட்சி மூலம் ஐகோர்ட்டில் விசாரணை
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் அந்தோணிசாமி.
மதுரை,
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நிலஅளவை துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது லஞ்ச புகார் கூறப்பட்டது. அதன்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவருடைய சம்பளத்தில் 50 சதவீதம் பிழைப்பு ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. 6 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் நீடித்தால் பிழைப்பு ஊதியமாக அவருடைய சம்பளத்தில் இருந்து 75 சதவீத தொகை வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், பிழைப்பு ஊதியம் உயர்த்தப்படவில்லை.
அந்த தொகையை வழங்கக்கோரியும், தன் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும் அந்தோணிசாமி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வந்தார். இதற்கிடையே கடந்த 5–ந்தேதி முதல் அவர் சென்னை ஐகோர்ட்டுக்கு சுழற்சிமுறையில் மாற்றப்பட்டார். இந்தநிலையில் அந்தோணிசாமியின் வழக்கு நேற்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த வழக்கை சென்னையில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். முடிவில், மனுதாரருக்கு பிழைப்பு ஊதிய தொகையாக சம்பளத்தில் இருந்து 75 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
3 மாதத்துக்கு ஒருமுறை நீதிபதிகள் சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளுக்கு சுழற்சி முறையில் மாற்றப்படுவார்கள். அவ்வாறு நீதிபதிகள் மாற்றப்பட்டாலும், குறிப்பிட்ட வகை வழக்குகளை தொடக்கத்தில் எந்த நீதிபதி விசாரிக்கிறாரோ, அவரே கடைசி வரை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதற்காக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் காணொலிகாட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.