முறைகேடுகளில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க பணியாளர் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமநாதபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.தரைக்குடியை சேர்ந்த ஹிதாயத்துல்லா
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.தரைக்குடியை சேர்ந்த ஹிதாயத்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன்கீழ் தரைக்குடி, செவல்பட்டி, கொண்டுநல்லான்பட்டி ஆகிய ஊர்களில் நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் பல முறைகேடுகள் நடக்கின்றன. ஏற்கனவே முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளர் ஒருவர் மீது வணிக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரையே தற்போது அந்த சங்கத்தின் எழுத்தராக நியமித்து உள்ளனர். இவர் தனக்கு கீழ் ஆட்களை நியமித்து மேலும் பல முறைகேடுகளை செய்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஏ.செல்வம், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனு குறித்து ராமநாதபுரம் கலெக்டர், மாவட்ட வழங்கல் அதிகாரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆகியோர் 15 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.