மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி பெருவிழா


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி பெருவிழா
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மன்னார்குடி,

ராஜகோபாலசாமி கோவில்

தமிழகத்தில் சிறப்பு பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவபெருமாள், உற்சவராக ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் மாடு மேய்க்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தாயார் சன்னதியில் மூலவராக ஜென்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பங்குனி பெருவிழா

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாட்கள் பெருவிழாவும், அதனை தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் கோவிலில் பெருமாள் சன்னதி முன்பு உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கோவில் பட்டாச்சாரியார்கள், வேத மந்திரங்களை முழங்க கருட உருவம் பொறித்த கொடியை ஏற்றினர். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீதி உலா

முதல் நாள் நிகழ்ச்சியாக கோபாலனுக்கு பட்டு சாத்துதல் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பெருமாள் கல்யாண அவசர திருக்கோல காட்சி நடந்தது. இரவு 9 மணிக்கு யானை வாகன மண்டபத்தில் இருந்து கொடி சப்பரம் புறப்பட்டது. கொடி சப்பரத்தில் கோபாலன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) கண்டபேரண்ட பட்சி வாகனத்திலும், 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்கசூர்யபிரபை வாகனத்திலும், 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்க கருட வாகனத்திலும் இரட்டைகுடை சேவை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி உற்சவம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடக்கிறது. இரவு தங்க வெட்டுங்குதிரை வாகனமும், 2-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான சிவராம் குமார், நிர்வாக அதிகாரி சுகுமார், கோவில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story