பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள்–அரசியல் கட்சியினர் சாலை மறியல்
கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள்–அரசியல் கட்சியினர் சாலை மறியல் 110 பேர் கைது
பெரம்பலூர்,
கிணற்றில் பிணமாக மிதந்த பெண் கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவருடைய உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் பெண் பிணம்பெரம்பலூர் அருகே குரும்பலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுடைய மகள் ஐஸ்வர்யா(வயது 22). கோவையில் உள்ள ஒரு பஞ்சு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி சொந்த ஊருக்கு வந்த ஐஸ்வர்யா திடீரென மாயமானார். இந்த நிலையில் குரும்பலூர் கே.புதூர் சாலையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பிணமாக மிதந்தார். பெரம்பலூர் போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலப்புலியூரை சேர்ந்த ஒரு வாலிபரும், ஐஸ்வர்யாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்தனர். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த ஐஸ்வர்யா தனது காதலனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் காதல் பிரச்சினையில் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்து ஐஸ்வர்யா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஐஸ்வர்யாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சோனல்சந்திராவிடம் உறவினர்கள் மனு கொடுத்தனர்.
சாலை மறியல்இந்த நிலையில் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஐஸ்வர்யாவின் உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காதல் பிரச்சினையில் ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், சிவசுப்பிரமணின் உள்பட போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது ஐஸ்வர்யாவின் உறவினர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவின் அக்கா மேனகா நிருபர்களிடம் கூறுகையில், காதல் தகராறில் தான் எனது தங்கை கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணமான வாலிபர் வெளிநாடு சென்று விட்டதாக கூறுகின்றனர். போலீசார் தான் விசாரணை நடத்தி அந்த வாலிபர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் சரியான முடிவு கிடைக்காவிட்டால் நான் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன், என்று கூறினார்.
வாக்குவாதம்இந்நிலையில் சுமார் ½ மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த பின்னரே வழக்கில் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் ஐஸ்வர்யாவின் உறவினர்கள் உள்ளிட்டோர் பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
110 பேர் கைதுமேலும் மறியலில் ஈடுபட்டவர்கள், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஸ்வர்யா இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதற்கிடையே ஐஸ்வர்யாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவின் உறவினர்களை சமாதானப்படுத்தி உடலை ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.