பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் இடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை சித்தராமையா பேட்டி


பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் இடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 18 March 2017 2:15 AM IST (Updated: 18 March 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் இடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் இடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று சித்தராமையா கூறினார்.

கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அரசியல் ஆதாயம் தேட முயற்சி

நான் தாக்கல் செய்த பட்ஜெட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்களும் இந்த பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். இதை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்களை திசை திருப்பவே பா.ஜனதாவினர் சட்டசபை கூட்டத்தை நடத்த விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள்.

சட்டசபையை முடக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பா.ஜனதா தேட முயற்சி செய்கிறது. சபையின் நேரத்தை அவர்கள் தேவை இல்லாமல் வீணாக்குகிறார்கள். போலி குறிப்பேடு குறித்து விவாதிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். மக்கள் பிரச்சினையில் அவர்களுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை. இதனால் தான் கடந்த 2 நாட்களாக தர்ணா போராட்டத்தை நடத்துகிறார்கள்.

கடித போக்குவரத்து கன்னடத்தில்...

குறிப்பேடு விவகாரத்தில் சபாநாயகர் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா வி‌ஷயங்கள் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. இதனால் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்து சபையை முடக்குகிறார்கள். வறட்சி குறித்து விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும்.

ஆனால் பா.ஜனதாவினருக்கு சட்டசபை நடைமுறை மீது நம்பிக்கை இல்லை. சபையை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் பா.ஜனதாவினர் அதற்கு தயார் இல்லை. அரசு விவகாரங்கள் தொடர்பாக கடித போக்குவரத்து கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.

விசாரணை நடத்துவேன்

ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீவத்சவ கிருஷ்ணா ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுமாறு கூறியிருப்பதாக நீங்கள் (நிருபர்கள்) சொல்கிறீர்கள். இதுகுறித்து விசாரணை நடத்துகிறேன். கர்நாடகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கன்னடத்தில் தான் கடிதங்களை எழுத வேண்டும். இது கட்டாயம் ஆகும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story