இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் போலி டாக்டர் கைது


இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 3:00 AM IST (Updated: 18 March 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய வழக்கில் போலி டாக்டர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ரகுபதி மருத்துவ புத்தகத்தை படித்து அதன்படி கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்தார்.

மேலும் மருந்துக்கடையும் வைத்து நடத்தி வந்தார். இவரது மருந்துக்கடையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதில் மயங்கிய அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்தவுடன், நீ மயக்கமாக இருக்கும் போது உன்னை ஆபாசபடம் எடுத்து வைத்துள்ளேன். எனவே என்னை 2–வது திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் சந்தோசமாக இருப்போம் என ரகுபதி தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

கைது

மேலும் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய பேசி முடித்து நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அப்போது, ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரிடமும், மாப்பிள்ளையிடமும் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த படத்தை காண்பித்து நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கடந்த 4.9.2015 அன்று ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

ஆனால் ரகுபதி போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லாத்தூர் பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ரகுபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர் மீது மானபங்கபடுத்துதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், தனக்கு கீழ் வேலை செய்தவரை பலாத்காரம் செய்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ரகுபதி ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story