ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியல் போலீசார் தடியடி
விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியல்– போக்குவரத்து பாதிப்பு போலீசார் தடியடி
விராலிமலை
விராலிமலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது சிலர் கற்களை வீசியதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.
ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கீரனூர் பிரிவு சாலையில் உள்ள அம்மன்குளத்தில் கிராம மக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் சில காரணங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை போன்றவற்றால் கடந்த 8 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து விராலிமலை பகுதி மக்கள் அம்மன்குளத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தடுப்பு வேலிகள், வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்யும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த பணிகளை கலெக்டர் கணேஷ் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாலை மறியல்இந்நிலையில் நேற்று மாலை திடீரென அம்மன்குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து நேற்று மாலை விராலிமலை சோதனை சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார், விராலிமலை ஊருக்குள் பஸ்கள் வராமல் தடுத்து, புறவழிச்சாலை வழியாக திருப்பி விட்டனர்.
இதையடுத்து சோதனை சாவடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினர், விராலிமலை புறவழிச்சாலை இலுப்பூர் பிரிவு சாலையில் உள்ள பாலத்தில் திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
போலீசார் தடியடிஇந்த சாலை மறியலால் திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்தை சரிசெய்ய பொதுமக்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் சாலையில் நின்ற பஸ்கள் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ் மற்றும் போலீசார் காயமடைந்தனர். மேலும் தடியடி மற்றும் கல்வீச்சில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டு விராலிமலை மற்றும் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விராலிமலை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.