இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: ஆழ்துளை கிணற்றுக்கு இறுதிச்சடங்கு செய்து போராட்டம்
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லாண்டார்கொல்லையில் ஆழ்துளை கிணற்றுக்கு இறுதிச்சடங்கு செய்து போராட்டம் நடைபெற்றது.
வடகாடு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக நடந்த போராட்டம் கடந்த 9–ந்தேதி வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று 13–வது நாள் போராட்டமாக வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகளும் வடகாடு தெற்கு கடைவீதி ஆர்ச் அருகில் திரண்டு கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் மா, பலா, வாழை உள்ளிட்ட விளைபொருட்களுடன் பெரியகடைவீதி போராட்ட பந்தலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்பு அங்கு அமர்ந்து இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இறுதிச்சடங்கு செய்து...இதேபோல் நல்லாண்டார்கொல்லையில் நேற்று 30–வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், கிராமத்து ஆண்கள் தரையில் விழுந்து அழுது புரண்டும், ஆழ்துளை கிணற்றை சுற்றி இறுதிச்சடங்கு செய்வதுபோல் பானையை சுமந்து 3 முறை சுற்றிவந்து பானையை உடைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.