திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சாலை மறியல்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் 227 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
உள்ளாட்சி தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 14–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 900 ஊழியர்களில் சுமார் 750 பேர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இவர்களது வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி பிரிவு, ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
சாலை மறியல்வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவதற்காக திரண்டு நின்றனர். அவர்களது போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடையை மீறி ஊரகவளர்ச்சி துறை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மருதுபாண்டி உள்பட 227 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 42 பேர் பெண் ஊழியர்கள் ஆவார்கள். ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.