போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதை பணிகளை 23, 24–ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதை பணிகளை 23, 24–ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு, சென்னை தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்
கிணத்துக்கடவு,
போத்தனூர்–பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரெயில்பாதை பணிகளை 23, 24–ந்தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார் என்று சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ் கூறினார்.
அகல ரெயில்பாதைபோத்தனூர்–பொள்ளாச்சி இடையே உள்ள 40 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பொள்ளாச்சி–கிணத்துக்கடவு இடையே உள்ள 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள பணிகள் முடிவடைந்து தண்டவாளங்களை நவீன எந்திரங்கள் மூலம் 3 முறை ஆய்வு செய்யப்பட்டது.
பின்பு டிராலி மூலமாகவும் தண்டவாளங்கள் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் கடந்த வாரம் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரை ரெயில் என்ஜின் விடப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. தற்போது ரெயில்வே நிர்வாகம் போத்தனூர்–பொள்ளாச்சி இடையே விரைவில் ரெயில் சேவையை தொடங்க ஆர்வம் காட்டியுள்ளதை தொடர்ந்து பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
சென்னை தெற்கு ரெயில்வே அதிகாரி ஆய்வுபோத்தனூர்–கிணத்துக்கடவு வழியில் அரசம்பாளையம்–செட்டிபாளையம் இடையே பாறைகள் உள்ள 1 கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே பணிகள் முடிய வேண்டியுள்ளது. இந்த பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பார்வையிட நேற்று காலை போத்தனூர் ரெயில்நிலையத்திற்கு சென்னை தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) சுதாகர்ராவ், தலைமை பொறியாளர் பிரபுல்லா வர்மா ஆகியோர் வந்தனர். அவர்களை உதவி தலைமை பொறியாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
பின்னர் இவர்கள் போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் ரெயில்வே தண்டவாளங்களை பார்வையிட்டனர். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் செட்டிபாளையம் –அரசம்பாளையம் பகுதியில் 60 அடி பள்ளத்தில் அமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் அதே பகுதியில் 1 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து அரசம்பாளையம்–சொலவம்பாளையம் செல்லும் ரெயில்வேகேட் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர்.
டிராலியில் சென்றார்அங்கிருந்து டிராலியில் அமர்ந்து கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வந்து சிக்னல் சிஸ்டம் பொருத்தும் பணி, லெவல் கிராஸ்சிங் பகுதிகள், சிக்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்து அதே டிராலியில் பொள்ளாச்சி கிளம்பி செல்லும் வழியில் முள்ளுப்பாடி ரெயில்வே கேட், கோவில்பாளையம் உள்ளிட்ட பல பகுதியில் அமைக்கப்பட்டுள் பாலங்களையும் பார்வையிட்டு பொள்ளாச்சி ரெயில்நிலையத்திற்கு சென்றனர்.
முன்னதாக தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) சுதாகர்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுபோத்தனூர்–பொள்ளாச்சி இடையே அகலரெயில்பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது செட்டிபாளையம் –அரசம்பாளையம் இடையே பாறைகள் அதிக அளவில் உள்ளதால் அந்த பணியை விரைவுபடுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 22–ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு 23,24 ஆகிய 2 நாட்கள் போத்தனூர்–பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் டிராலி மற்றும் ரெயிலில் சென்று ஆய்வு நடத்துவார்கள். அதன் பின்னர் போத்தனூர்–பொள்ளாச்சி இடையே ரெயில் ஓடும் தேதியை அறிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.