கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ரூ.1,313 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ரூ.1,313 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
கோவை
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கோவை கலெக்டர் அலுவலகம் வருகிறார். அங்கு ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் கார் மூலம் கொடிசியா தொழிற் கண்காட்சி வளாகத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.1,313 கோடி மதிப்பீட்டில் 8,031 வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், 6,200 பயனாளிகளுக்கு ரூ.12.12 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
கோவை மாவட்டம்இதில் கோவையில் புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பேரூர் மற்றும் மதுக்கரை தாலுகா அலுவலகங்கள், காவலர் குடியிருப்பு, 9 போலீஸ் நிலைய கட்டிடங்கள், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், ஈச்சனாரி மற்றும் மாசாணியம்மன் கோவில்களில் அன்னதான மண்டபம், புதிய பாலங்கள், சங்கனூரில் சுற்றுச்சூழல் துறை ஆய்வகம் என்று கோவை மாவட்டத்தில் ரூ.1047.56 கோடி மதிப்பில் 6200 வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரிஇதுபோன்று ஈரோடு மாவட்டத்தில் 361 பணிகள் ரூ.108.21 கோடி மதிப்பிலும், திருப்பூர் மாவட் டத்தில் 815 பணிகள் ரூ.89.45 கோடி மதிப்பிலும், நீலகிரி மாவட்டத்தில் 229 பணிகள் ரூ.67.98 கோடி மதிப்பிலும் தொடங்கி வைக்கப்படுகிறது. விழாவில், சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், 4 மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
முதல்–அமைச்சர் வருகையையொட்டி கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கலெக்டர் அலுவலகத்தில் அமையும் 100 அரசு துறை அலுவலகங்கள்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 40–க்கும் மேற்பட்ட அரசு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பழைய கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.19.80 கோடி செலவில் கடந்த 2014–ம் ஆண்டு தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களுடன் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.
இதில் 2,776 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளமும், தலா 2,597 சதுர மீட்டர் பரப்பளவில் முதல் மற்றும் 2–வது தளமும், 2,478 சதுர மீட்டர் பரப்பளவில் 3–வது தளமும் அமைந்துள்ளன. இதில் தரைத்தளத்தில் கருவூல அலுவலகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கு, முதல் தளத்தில் கலெக்டர் அலுவலக அறை, நேர்முக உதவியாளர்கள் அறைகள், கூட்டரங்கம், 2–வது தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மற்றும் பிற அலுவலகங்கள், 3–வது தளத்தில் ஊரக வளர்ச்சி முகமை, பிற்படுத் தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் நலத்துறை உள்ளிட்ட பிற அலுவலகங்கள் இடம் பெறுகிறது.
ஒவ்வொரு தளத்திலும் 25 அரசு துறை அலுவலகங்கள் என மொத்தம் 100 அரசு துறை அலுவலகங் கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு தளத்திலும் கழிவறைகளும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. 3 தளங்களுக்கும் செல்ல வசதியாக 4 லிப்ட் வசதிகள் உள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவை களுக்கு வருகிற பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.