திருத்தணி அருகே மரத்தில் கார் மோதி சென்னையை சேர்ந்த 3 பேர் பலி


திருத்தணி அருகே மரத்தில் கார் மோதி சென்னையை சேர்ந்த 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2017 3:30 AM IST (Updated: 18 March 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருத்தணி,

சென்னை புதிய அண்ணாநகர் என்.எஸ்.சி. போஸ் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரு அருகில் விரூபாட்சிபுரத்தில் உள்ள நாட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை சிகிச்சை பெறுவதற்காக ஆறுமுகம், அவரது மருமகள் ஜெயஸ்ரீ (44), உறவினர்கள் ரகு (35), பாஸ்கரன் (44) ஆகியோர் சென்னையில் இருந்து விரூபாட்சிபுரத்திற்கு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை புறப்பட்டனர். காரை ரகு ஓட்டினார்.

அவர்கள் வந்த கார் மதியம் 2 மணி அளவில் திருத்தணி அருகே அகூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஆறுமுகம், ஜெயஸ்ரீ, ரகு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பாஸ்கரன் பலத்த காயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பாஸ்கரனை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

பலியான ரகு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். படுகாயம் அடைந்த பாஸ்கரனின் சொந்த ஊர் காஞ்சீபுரம் அருகில் உள்ள செய்யாறு நாவல்பாக்கம் என்றும், அவர் மின்வாரியத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. 

Next Story