கொடைக்கானலில் இந்த ஆண்டு முன்கூட்டியே குளு, குளு சீசன் தொடங்க வாய்ப்பு


கொடைக்கானலில் இந்த ஆண்டு முன்கூட்டியே குளு, குளு சீசன் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 18 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் இந்த ஆண்டு முன்கூட்டியே குளு, குளு சீசன் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

கொடைக்கானல்

‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளு, குளு சீசன் நிலவும். இதனை அனுபவிக்க வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொடைக்கானல் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அங்கு வறட்சியான சூழல் நிலவியது. ஆனால் இந்த ஆண்டில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 3–ந்தேதி முதல் பரவலாக மழை பெய்தது.

முன்கூட்டியே சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் சாரல் மழை மட்டுமின்றி பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் காலை நேரத்தில் மிதமான வெப்பமும், பிற்பகல் முதல் மேகமூட்டம் சூழ்ந்து ரம்மியமாகவும் காணப்படுகிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு முன்கூட்டியே குளு, குளு சீசன் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தற்போதே வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும் அங்குள்ள பில்லர் ராக், பைன் மரக்காடு, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வழக்கத்தை விட இந்த ஆண்டு மார்ச் மாதம் இதுவரை 131 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருகிற மே மாதம் வரை நடைபெற உள்ள சீசனின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும், என்றனர்.


Next Story