20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் மறியல், 485 பேர் கைது
திண்டுக்கல்லில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 485 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்தத்தோடு, ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் திரண்டனர்.
அங்கிருந்து சங்க கொடிகளை கையில் ஏந்தி எம்.ஜி.ஆர். சிலை நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
485 பேர் கைதுபோக்குவரத்து பாதிக்காத வகையில் ஏற்கனவே போலீசார் வாகனங்களை திருப்பி விட்டு இருந்தனர். சுமார் 10 நிமிடம் நீடித்த போராட்டத்தை கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தினர். பிறகு, அனைவரையும் அவர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதில், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் வீரகடம்பகோபு, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட 485 பேர் கைதானார்கள். இவர்களில் 383 பேர் ஆண்களும், 102 பேர் பெண்களும் ஆவர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.