அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்


அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 18 March 2017 5:15 AM IST (Updated: 18 March 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அ.தி. மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

சென்னை,

சென்னை பெரியமேட்டில் செயல்படும் எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவருமான டி.டி.வி.தினகரன் மீது இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக் காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

மேலும் ‘பரணி பீச் ரிசார்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தள்ளுபடி

வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு இன்னொரு வழக்கும் தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

மீண்டும் விசாரணை

20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்த கோர்ட்டில் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வக்கீல் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு மலர்மதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி

மேலும் வருகிற 22–ந் தேதி அன்று வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் மாஜிஸ்திரேட்டு கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 23–ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றும், அன்றைய தினமே பிரசாரத்தை தொடங்குவேன் எனவும் கூறினார்.

டி.டி.வி.தினகரன் வருகையையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story