கடும் வறட்சியால் கொட்டாரம் பகுதியில் கருகும் தென்னை மரங்கள்
கடும் வறட்சியால் கொட்டாரம் பகுதியில் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் விவசாயத்திற்கு இணையாக தென்னை விவசாயமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மழை குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி மற்றும் வெப்பத்தின் பிடியில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே ஆறு, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. நெல் வயல்கள் தண்ணீர் இன்றி வெடிப்பு விழுந்து காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
தென்னை மரங்கள் கருகினவறட்சியினால் தென்னை மரங்களும் கருகி வருகின்றன. குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் பல இடங்களில் போதிய தண்ணீர் இன்றி தென்னை மரங்களின் கொண்டைகள் கருகி வருகின்றன. குறிப்பாக கொட்டாரம், மந்தாரம்புதூர், பெரியவிளை, அச்சன்குளம், மகராஜபுரம், பொற்றையடி போன்ற பகுதிகளில் தென்னை மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதைக் கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இந்த வறட்சியின் காரணமாக தேங்காய் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தேங்காய் ஒன்று ரூ.20 முதல் 25 வரை விற்கப் படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே குமரி மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் பற்றிய கணக்கெடுப்பு செய்து அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.