குமரி மாவட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தால் புகார் அளிக்கலாம் கலெக்டர் தகவல்


குமரி மாவட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தால் புகார் அளிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் மழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனவே ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு, குடிநீர் நல்லிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளின் வால்வுகளில் நீர் கசிவு காரணமாக குடிநீர் வீணாவதை கண்டாலோ, கிராமங்களில் பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தாலோ வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், தெருக்களில் உள்ள பொது நல்லியிலிருந்து தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல், வாகனங்களை கழுவுதல் மற்றும் ரப்பர் குழாய்கள் பொருத்தி வீடுகளுக்கு தண்ணீர் எடுத்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வீட்டு இணைப்பு குடிநீர் குழாய்களிலிருந்து பெரிய நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீரை பல நாட்கள் பயன்பாட்டுக்கு சேமிக்காமல் தேவைக்கு மட்டும் எடுத்து பயன்படுத்த வேண்டும். பொது சிறு மின்விசை தொட்டியில் கால்நடைகளை குளிப்பாட்டுதல், வாகனங்களை கழுவுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அபராதம் விதிக்கப்படும்

மின் மோட்டார்கள் பயன்படுத்தி வீட்டு இணைப்புகளில் இருந்து சட்ட விரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடும் அபராதம் விதிக்கப்பட்டு இணைப்பும் துண்டிக்கப்படும். ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தனியார் தொழிற்சாலைகளின் கழிவுநீரை விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தமது ஆலை கழிவு நீரை ஆலை வளாகங்களுக்குள்ளேயோ அல்லது கழிவு நீரோடைகளில் மட்டுமே வெளிவிடவேண்டும்.

குடிநீர் தொடர்பான புகார்களை நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தெரிவிக்கலாம்.


Next Story