மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை, நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ராமனாதிச்சன்புதூரை சேர்ந்தவர் சிலுவைதாசன். இவருடைய மனைவி ஞானபிரகாசி (வயது 64). இவர்களுடைய மகள் சுதா. இவர், கணவருடன் அழகப்பபுரம் திருமூலர்நகரில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அமுதசெல்வி (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மகளுக்கு திருமணம் செய்ததால் ஏற்பட்ட கடனை தீர்ப்பதற்காக தன்னுடைய சொத்து பத்திரத்தை அடகு வைக்க சிலுவைதாசன் எண்ணினார். பின்னர் சொத்து பத்திரத்தை தன் மகள் சுதாவிடம் கொடுத்து அடகு வைத்து பணம் தருமாறு கூறினார். அதைத் தொடர்ந்து சுதா, பத்திரத்தை அடகு வைப்பது தொடர்பாக அமுதசெல்வியிடம் ஆலோசனை கேட்டார். சொத்து பத்திரத்தை அமுதசெல்வியே அடகு வைத்து தருவதாக சுதாவிடம் கூறினார்.

பணம் தருவதாக அழைப்பு

அதன் பிறகு அமுதசெல்வியின் ஏற்பாட்டில், சிலுவைதாசன் தன் சொத்துக்களை விற்பது தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு ‘பவர் பத்திரம்‘ எழுதிக்கொடுத்தார். அதற்கு நிதி நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை அமுதசெல்வி பெற்றுக்கொண்டார். ஆனால் இந்த பணத்தில், ரூ.5 ஆயிரத்தை மட்டும் சிலுவைதாசனுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.95 ஆயிரத்தை அமுதசெல்வியே வைத்துக்கொண்டார்.

இதற்கிடையே அமுதசெல்வி அழகப்பபுரத்தில் இருந்து நாகர்கோவில் ஓட்டுப்புரை தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு குடியேறினார். அப்போது இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த மான்றோ என்ற மாணிக்கராஜ் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 21–5–2010 அன்று அமுதசெல்வி, தான் கொடுக்க வேண்டிய மீதி பணம் ரூ.95 ஆயிரத்தை தருவதாக கூறி சிலுவைதாசனை நாகர்கோவில் வரும்படி அழைத்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இதை நம்பிய சிலுவைதாசனும், அவருடைய மனைவி ஞானபிரகாசியும் நாகர்கோவில் வந்தனர். இவர்களை அமுதசெல்வியும், மாணிக்கராஜூம் ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு இரவில் ஒழுகினசேரி பாலம் அருகே வந்தார்கள். பின்னர் அங்குள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் சிலுவைதாசனையும், ஞானபிரகாசியையும் அவர்கள் அழைத்து சென்று 2 பேரின் கழுத்தையும் கத்தியால் கொடூரமாக அறுத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஞானபிரகாசி பரிதாபமாக இறந்தார்.

சிலுவைதாசனும் கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கி கீழே விழுந்தார். மயக்க நிலையில் இருந்த சிலுவைதாசன் இறந்துவிட்டதாக கருதி ஞானபிரகாசியின் உடலையும், சிலுவைதாசனையும் ஒழுகினசேரி பாலத்தின் கீழ் உள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு அவர்கள் 2 பேரும் சென்றுவிட்டனர்.

ஆயுள் தண்டனை

இதனைத் தொடர்ந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிலுவைதாசன் ரெயில் தண்டவாளத்தில் இருந்து மெல்ல மெல்ல நடந்து மெயின்ரோட்டுக்கு வந்தார். அங்கு அவரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதசெல்வி மற்றும் மாணிக்கராஜை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோ‌ஷம் விசாரித்து வந்தார். வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமுதசெல்வி மற்றும் மாணிக்கராஜூக்கு கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி செய்த குற்றத்துக்காக 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை செய்ய கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், ஏமாற்றுதல் குற்றத்துக்காக 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோ‌ஷம் உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜொஹானா அசோக் ஆஜராகி வாதாடினார்.


Next Story