நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 55 பெண்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலைநிறுத்தம்உள்ளாட்சித்தேர்தலை உடனே நடத்த வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை மற்றும் ஐகோர்ட்டு தீர்ப்புபடியும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் கடந்த 14–ந் தேதி முதல் நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிப்பிரிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
4–வது நாளாக...மேலும் அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் நேற்றும் வெறிச்சோடி இருந்தன. ஒரு சில அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றினார்கள்.
இதற்கிடையே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக பஞ்சாயத்து பகுதிகளில் 17–ந் தேதி முதல் (நேற்று) குடிநீர் வினியோகப்பணியை நிறுத்தப்போவதாகவும், நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரசாணை வெளியிட வேண்டும்அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர். அப்போது, சங்க மாநில துணை தலைவர் சுமதி நிருபர்களிடம் கூறியதாவது:–
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் குடிநீர் வினியோக பணியை இன்று (அதாவது நேற்று) நிறுத்தியுள்ளோம். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபடப்போகிறோம். கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக அமைச்சர் எங்களை இன்னும் அழைக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் வருகிற திங்கட்கிழமை முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதை அரசாணையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
155 பேர் கைதுமறியல் போராட்டத்தையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாரிச்சாமி, கண்மணி மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பு, பொருளாளர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 55 பெண்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.