பல்கலைக்கழக விதிமீறல்களை தடுக்கக்கோரி மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


பல்கலைக்கழக விதிமீறல்களை தடுக்கக்கோரி மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 18 March 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக விதிமீறல்களை தடுக்கக்கோரி மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மீது தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் வரையறைகளை மீறியும், விதிமுறைகளை புறந்தள்ளியும் தொடர்ந்து பல புதிய இடர்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் விதித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 84 சதவீத தேர்வு கட்டண உயர்வை அறிவித்து பின்பு பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஓரளவு முறைசாரா தன்மையில் திருத்தியதால் மாணவர்கள் பலர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக அறிகிறோம். இதே நிலை தொடர்ந்தால் கல்விச்சூழல் பெருமளவு சீர்குலையும் அபாயம் உள்ளது. தற்போது தேர்வு நெருங்கும் சூழலில் கட்டணம் தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்கி மாணவர்களை குழப்பநிலைக்கு தள்ளியுள்ளனர். எனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விதிமீறல்களை தடுத்து உரிய விசாரணை மேற்கொண்டு மாணவர் நலன் மற்றும் சுமூகமான கல்விச்சூழலை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

கல்லூரி மாணவ–மாணவிகள் ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்ற பின்னர் பரபரப்பு அடங்கியது.


Next Story