சவுதி அரேபியாவில் தவிக்கும் இளைஞரை மீட்க வேண்டும்


சவுதி அரேபியாவில் தவிக்கும் இளைஞரை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 17 March 2017 11:00 PM GMT (Updated: 17 March 2017 10:39 PM GMT)

சவுதி அரேபியாவில் தவிக்கும் இளைஞரை மீட்க வேண்டும் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி

சவுதி அரேபியாவில் தவிக்கும் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

சிறையில் அடைப்பு

புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த அரசகுமரன் (வயது 30) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு வேலைக்கு சேர்த்த நிறுவனம் அவரது ஐ.டி.ஐ. படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் சம்பளத்தை தரவில்லை.

அவருடன் மேலும் 28 பேரும் அங்கு பணி செய்துள்ளனர். அவர்களுக்கும் உரிய வேலை மற்றும் சம்பளத்தை தரவில்லை. இதனால் அவர்கள் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினையில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடைத்து வைப்பு

இந்தநிலையில் கடந்த மாதம் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு வேலை கொடுத்த நிர்வாகம் அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று பாலைவன பகுதியில் அடைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினருக்கு சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மாதம் நான் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் தெரிவித்தேன். அவரும் மத்திய உள்துறைக்கு தெரிவித்து தூதரகம் மூலம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் அரசகுமரனின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள், குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

கண்டுகொள்வதில்லை

வேறு எந்த மாநிலத்தவர் வெளிநாட்டில் தவித்தாலும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழன் என்றால் கண்டுகொள்வதில்லை. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மூலம் பாராளுமன்றத்தில் எழுப்ப கூறியுள்ளோம்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story