அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் விசாரணை தீவிரம்


அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.பிரமுகர் கொலை வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு போலீஸ் விசாரணை தீவிரம்

கண்டமங்கலம்,

சின்னபாபு சமுத்திரத்தில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. பிரமுகர்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 42), செங்கல்சூளை அதிபர். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். சேகரும் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் இறந்துவிட்டார்.

அதன்பிறகு ராஜ்குமாரின் விவசாய நிலத்தில், சேகர் பயிர் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3ந்தேதி இரவு விவசாய நிலத்துக்கு வந்த சேகர் மதுகுடிப்பதற்காக பெரியபாபு சமுத்திரத்தை சேர்ந்த தனது மற்றொரு நண்பர் பக்தவச்சலத்தை செல்போனில் தொடர்பு கொண்டு திண்பண்டங்கள் வாங்கி வரும்படி கூறியதாக தெரிகிறது.

அவரும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு சேகரை பார்க்கச் சென்ற போது அங்கு சேகர், தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து சேகரின் உறவினர்களுக்கு பக்தவச்சலம் தகவல் கொடுத்தார். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கண்டமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நிலப்பிரச்சினையில் சேகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் கூறும்போது, ‘‘இந்த படுகொலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

4 தனிப்படைகள் அமைப்பு

14 நாட்கள் ஆகியும் இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் கொலையாளிகளை தீவிரமாக தேடி கண்டுபிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் 4 தனிப்படைகள் அமைத்துள்ளார். விழுப்புரம் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் ஒரு பிரிவினரும், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில் ஒரு பிரிவினரும், காணை சப்–இன்ஸ்பெக்டர் அரிகரசுதன் தலைமையில் ஒரு பிரிவினரும், கண்டமங்கலம் சப்–இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ரவிச்சந்திரன், தலைமையில் ஒருபிரிவினரும் என 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் கொலையாளிகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story