செவ்வாய்ப் பயணம்... புற்றுநோய் அபாயம்!


செவ்வாய்ப் பயணம்... புற்றுநோய் அபாயம்!
x
தினத்தந்தி 18 March 2017 7:15 PM IST (Updated: 18 March 2017 11:35 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க் கிரகத்துக்கு ஆராய்ச்சிப் பயணம் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஒரு புதிய ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் விண்வெளி ஆய்வு நாடுகள், அங்கு விஞ்ஞானிகளை நேரடியாக அனுப்பி ஆய்வு மேற்கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

பூமியில் இருந்து செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைய 3 ஆண்டு காலத்துக்கு 140 மில்லியன் மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டும்.

இந்தப் பயணத்தில், கதிர்வீச்சு தாக்கும் அபாயம் மிகவும் அதிகம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பும் விஞ்ஞானிகளுக்கு ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையை நாசா விஞ்ஞானிகளும் தற்போது ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

செவ்வாய்க் கிரகத்தை நெருங்க நெருங்க கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பதாகக் கூறும் ஆய்வாளர்கள், இது நேரிடையாக மனித திசுக்களை தாக்கி புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார் கள்.

அதோடு, மிக அதிக அளவிலான மின்னணுக்களின் தாக்குதல் நமது திசுக்களில் மரபணு ரீதியான கடும் சேதத்தை ஏற்படுத்தும். இதுவும் புற்றுநோய்க் கான வாய்ப்பை பெருமளவு அதிகரிக்கும் என்கிறார்கள்.

விண்வெளிப் பயணகாலத்தில் பயணிகளுக்கு மிக அதிக அளவில் சூரிய ஆற்றல் கதிர்களின் தாக்குதல் இருப்பதோடு, காஸ்மிக் கதிர்களின் தாக்கமும் இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

செவ்வாய்ப் பயணத்தின்போது ஏற்படும் கதிர்வீச்சுகளை செயற்கையாக உருவாக்கி, பின்னர் அந்த ஆய்வுக்கு உட்படுத்திய நபர்களின் திசுக்களை எலிகளில் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்தத் திசுக்களில் புற்றுநோய் வாய்ப்புகள் மிக அதிகம் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி சுமார் 80 சதவீதம் சரிவடைந்ததும் ஆய்வில் தெரியவந்தது.

Next Story