மயன் நாகரிகத்தின் மலைப்பூட்டும் விஷயங்கள்


மயன் நாகரிகத்தின் மலைப்பூட்டும் விஷயங்கள்
x
தினத்தந்தி 18 March 2017 7:45 PM IST (Updated: 18 March 2017 11:46 AM IST)
t-max-icont-min-icon

பண்டைக் காலத்தில் பல்வேறு நாகரிகங்கள் செழித்தோங்கி இருந்திருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, மயன் நாகரிகம்.

இது பண்டைக் கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். மயன், அஸ்டெக் ஆகிய இரண்டு நாகரிகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரிகங்களாக இருந்தன.

மயன் இனத்தினர், கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர்.

மயன் நாகரிகம் ஏறக்குறைய மறைந்துவிட்டாலும், தற்போதும்கூட இந்த இனத்தவர் மெக்சிகோ, குவாதிமாலா போன்ற நாடுகளின் கிராமப்புறப் பகுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

அஸ்டெக் போல் மயன் இனத்தவர்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில், பிரமிடுகள் நிறைந்த மயன் நகரங்களில் ஒன்றை தனியார் உரிமையாளர் ஒருவரிடம் இருந்து அரசு வாங்கியது.

கைதிகள், அடிமைகள், குற்றவாளிகள் மீது நீலம் அல்லது சில குறிப்பிட்ட நிறத்தைப் பூசி, பிரமிடு மீது நிறுத்தி அங்கு அவர்கள் சரமாரியாக அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டிருக் கிறார்கள்.

மயன்கள் தனித்த எழுத்துமுறையையும் பின்பற்றியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக மயன் எழுத்துகள் ஸ்பானிய ஆக்கிரமிப்பின்போது அழிந்துவிட்டன. ஆனால், 20-ம் மற்றும் 21-ம் நூற்றாண்டுகளில், எஞ்சியிருந்த எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டன.

மயன் இனத்தவர்கள் உருக்கு அல்லது இரும்பை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. தங்கள் ஆயுதங்களை ‘ஆப்சிடியன்’ அல்லது எரிமலைப் பாறைகளால் மட்டுமே செய்திருக் கிறார்கள்.

குழந்தையின் கண் மாறுகண்ணாக மாறும் வரை குழந்தையின் கண்கள் முன் ஒரு பொருளை தொங்கவிட்டு ஆட்டியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்தநாள்படியே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

மயன் இனப் பெண்கள் தங்கள் பற்களில் புள்ளிகளை இட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மயன்கள் பயன்படுத்திய மருந்துகள் மிகவும் மேம்பட்டவை என்று கூறப்படுகிறது. அவர்கள் மனித முடியைப் பயன்படுத்தி காயங்களுக்கு தையல் இட்டிருக்கிறார்கள். இயற்கையான வலி நிவாரணிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தற்போதும் மயன் வம்சாவளியினர் கோழியை பலி கொடுக்கும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.

மயன் மக்கள் இன்றும் வாழ்ந்து வந்தாலும், மயன்களின் கடைசி சுயாட்சி மாநிலம் 1697-ல் ஸ்பானிய ஆட்சிக்கு உட்பட்டது.

மயன் பேரரசு வீழ்ச்சியடைந்தது எப்படி என யாராலும் தெளிவாக வரையறுத்துக் கூற முடியவில்லை. அவர்களின் பூமிக்கு ஸ்பானியர்கள் வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே பல அழிவின் பாதாளத்தில் விழுந்துவிட்டன.

வறட்சி, பஞ்சம், அதிக மக்கள்தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் மயன் இன வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது சில தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Next Story