வேகமும், விவேகமும் கலந்த விளையாட்டு..!


வேகமும், விவேகமும் கலந்த விளையாட்டு..!
x
தினத்தந்தி 18 March 2017 3:45 PM IST (Updated: 18 March 2017 3:45 PM IST)
t-max-icont-min-icon

ஆக்ரோ‌ஷமான குத்துச் சண்டையையும், அமைதியான சதுரங்க விளையாட்டையும்... தனித்தனியே பார்த்து ரசித்த நமக்கு, ‘செஸ் பாக்ஸிங்’ நிச்சயம் புதுமையாகவே இருக்கும்.

க்ரோ‌ஷமான குத்துச்சண்டையையும், அமைதியான சதுரங்க விளையாட்டையும்... தனித்தனியே பார்த்து ரசித்த நமக்கு, ‘செஸ் பாக்ஸிங்’ நிச்சயம் புதுமையாகவே இருக்கும். ஏனெனில் அதிரடியான குத்துகளும், அரசியல் கலந்த காய் நகர்த்தலும்... சரிபாதியாக கலந்ததே ‘செஸ் பாக்ஸிங்’. பலசாலியாக இருப்பதுடன், புத்திசாலியாகவும் இருந்தால் மட்டுமே ‘செஸ் பாக்ஸிங்’ விளையாட முடியும்.

இப்படி மூளைக்கும், உடலுக்கும் இடையே நடக்கும் ‘செஸ் பாக்ஸிங்’ விளையாட்டிற்கு உலகெங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. உலகளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதில் பங்கேற்று சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பயிற்சி பெறுகிறார்கள், சேலம் செஸ் பாக்ஸிங் வீரர்கள்.

சென்னை, கோவை, மதுரை... போன்ற பகுதிகளில் ‘செஸ் பாக்ஸிங்’ பயிற்சி வழங்கப்பட்டாலும், சேலம் மாவட்டத்தில்தான் அதிகளவில் விளையாடப்படுகிறது. அங்கு தான் தமிழ்நாடு செஸ் பாக்ஸிங் கூட்டமைப்பும் இயங்குகிறது. இதனால் சேலம் பகுதியிலிருந்து ஏராளமான செஸ் பாக்ஸிங் வீரர்கள் உருவாகிறார்கள். புதுமையான விளையாட்டாக தமிழகத்திற்குள் புகுந்திருக்கும் ‘செஸ் பாக்ஸிங்’ பற்றிய தகவல்களை பைஜ் அகமதிடம் கேட்டோம். தமிழ்நாடு செஸ் பாக்ஸிங் கூட்டமைப்பின் பொது செயலாளரான அவர் போட்டியின் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் கூறுகிறார்...

‘‘முதல் மூன்று நிமிடங்களுக்கு சதுரங்கமும், அதற்கடுத்த மூன்று நிமிடங்களுக்கு குத்துச்சண்டையும் விளையாட வேண்டும். இதே முறையில் தொடர்ச்சியாக ஆறு சுற்றுகள் சதுரங்கமும், ஐந்து சுற்றுகள் குத்துச்சண்டை போட்டியும் இடம்பெறும். குத்துச்சண்டையில் எதிரியை ‘நாக் அவுட்’ செய்தாலும் அல்லது செஸ் விளையாட்டில் ‘செக்மேட்’ வைத்தாலும் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இறுதிச்சுற்று வரை போட்டி தொடர்ந்தால் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளரை அறிவிப்பார்கள்’’ என்று விளையாட்டின் அடிப்படையை விளக் கினார், பைஜ்.

முன்னாள் செஸ் பாக்ஸிங் வீரரான இவர், 100–க்கும் மேற்பட்ட வீரர்களை உருவாக்கியிருப்பதுடன், 300–க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். மேலும் தொடர்ந்தவர்... ‘‘இந்த விளையாட்டில் சதுரங்கம் மற்றும் குத்துச்சண்டை என மாறி, மாறி விளையாட வேண்டிய திருக்கும். அதற்கேற்றவாறு உடலையும், மனதையும் தயார்படுத்திக்கொண்டு விளையாடுவது மிகவும் சவாலானது. அதனால் பயிற்சியில் இருந்தே அந்த சூழலை உருவாக்குகிறோம். குத்துச்சண்டை பயிற்சி, சதுரங்க பயிற்சியுடன்... வீரர்களின் உடலுக்கும், மனதிற்கும் ஏற்ப தனித்தனி பயிற்சி களும் வழங்கப்படுகிறது. பலசாலியாகவும், புத்திசாலியாகவும் புகழ்பெற நினைத்தால் செஸ் பாக்ஸிங்கை விளையாடுங்கள்’’ என்பவர் தன்னிடம் பயிற்சி பெறும் ராஜேஸ்வரி மற்றும் இம்ரான் கான் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அதில் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி போன்ற பல பதக்கங்களை வென்றிருக்கும் ராஜேஸ்வரியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதுவரை குத்துச்சண்டைபையை (பாக்ஸிங்பேக்) உதைத்து வந்தவர் அதை நிறுத்திவிட்டு, நிதானமாக பதிலளிக்க ஆரம்பித்தார்...

குத்துச்சண்டையில் வெளிப்படக் கூடிய ஆக்ரோ‌ஷம் இந்த விளையாட்டிலும்வெளிப்படு கிறதா..?

‘‘நிச்சயமாக வெளிப்படும். ஏராளமான வீரர்கள் போட்டியை ஓரிரு சுற்றுகளிலேயே முடிக்க நினைப்பார்கள். அதனால் குத்துச்சண்டையை மிஞ்சும் அளவிற்கு ஆக்ரோ‌ஷமான குத்துகளை இதில் பார்க்கலாம். அதேபோன்று சதுரங்கத்தில் கொஞ்சம் தடுமாறுபவர்கள், குத்துச்சண்டை சுற்றிலேயே போட்டியை முடிக்க நினைப்பார்கள். அதனால் ஆக்ரோ‌ஷமான சண்டைகளுக்கு பஞ்சமிருக்காது. எனக்கு கிடைத்த வெற்றி பதக்கங்களுக்கு பின்னால், தனித்தனி கதைகள் இருக்கிறது. அதில் முதன்மை பெறுபவை குத்துச்சண்டை போட்டிகள் தான். உங்களுடைய முழு திறமையையும் வெளிகாட்டினால் மட்டுமே போட்டியில் நிலைத்திருக்க முடியும். அதேபோல புத்திசாலிகள், போட்டியை சதுரங்கத்திலேயே முடித்துவிட நினைப்பார்கள்’’

வயதிற்கு ஏற்ப விளையாட்டின் விதிமுறைகள் மாறுமா..?

‘‘இல்லை. ஒரே விதிமுறைகள் தான். ஆண்–பெண், பெரியவர்–சிறியவர் என அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தான். செஸ் பாக்ஸிங் போட்டியானது சப்–ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

‘சப்–ஜூனியர்’ பிரிவில் 10 வயது முதல் 15–வயதுக்குட்பட்டவர்கள், ‘ஜூனியர்’ பிரிவில் 15 வயது முதல் 18–வயதுக்குட்பட்டவர்கள், ‘சீனியர்’ பிரிவில் 18–வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கலந்து கொள்ளலாம். சீனியர் பிரிவு போட்டிகளை விடவும், ‘சப்–ஜூனியர்’ பிரிவில் விளையாடுபவர்களின் ஆட்டம் சிறப்பாக இருக்கும்’’  

பெண்களுக்கு என தனி பயிற்சிகள் இருக்கிறதா..?

‘‘ஆண்–பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிகள்தான். உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி என உடலை வலிமையாக்கும் பயிற்சி களுடன், சதுரங்க பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஒருசில காய்களை மட்டுமே வைத்து விளையாடுவது, சிப்பாய் காய்களை நகர்த்தும் வித்தைகள், மதிப்பில்லாத காய்களை மதிப்பு உள்ளவையாக மாற்றும் வித்தைகள்... என மூளையையும், உடலையும் ஒருசேர பலமாக்குகிறோம்’’ என்று கூறும் ராஜேஸ்வரி, சேலம் சோனா கல்லூரியில்    பி.இ.பே‌ஷன் டெக்னாலஜி படித்துக்கொண்டிருக் கிறார். இவரது பள்ளி பருவத்தில் உருவான குத்துச்சண்டை ஆசை, தற்போது ‘செஸ் பாக்ஸிங்’ வடிவில் உயிர்பெற்று உள்ளது. இவர் குத்துச்சண்டை விளையாட்டை பெண்களுக்கான தற்காப்பு ஆயுதமாகவும் பார்க்கிறார்.

இவருடன் ஏராளமானோர் பயிற்சி பெறுகிறார்கள். அதில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த இம்ரான் கானும் ஒருவர். அவரிடம் செஸ் பாக்ஸிங் விளையாட்டின் வரலாற்றையும், சில தகவல்களையும் கேட்டோம்... ‘‘ஜெர்மனி நாட்டை சேர்ந்த எங்கி பிலால், ஈபிரூசின் ஆகியோர் 1993–ம் ஆண்டு செஸ் பாக்ஸிங் விளையாட்டை கண்டுபிடித்தனர். 2010–ம் ஆண்டு மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோண்டு தாஸ் என்பவர் இந்தியாவிற்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு கடந்த 2011–ம் ஆண்டில் பாக்ஸிங் விளையாட்டில் அனுபவமும், ஆர்வமும் உள்ள பாபா விவேக், செஸ் பாக்ஸிங்கை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

முதன் முதலில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில்தான் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர், மகாராஷ்டிரா உள்பட 10 மாநிலங்களில் இருந்தும் வீரர்–வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் தமிழகத்திற்கு 2–வது இடம் கிடைத்தது. முதலிடத்தை ஆந்திரா தட்டிச்சென்றது. அதற்கடுத்து தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் நடந்த தேசிய போட்டிகளிலும் சேலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்’’

இந்தியாவில் செஸ் பாக்ஸிங் விளையாட்டு எந்த நிலையில் உள்ளது?

‘‘இந்தியாவை பொருத்தவரையில் 21 மாநிலங்களில் செஸ் பாக்ஸிங் விளையாடப்படுகிறது. வளர்ந்து வரும் விளையாட்டாக உள்ள செஸ் பாக்ஸிங்கில் தமிழகம், தேசிய அளவிலான போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஆந்திரா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் தேசிய அளவிலான செஸ் பாக்ஸிங் வீரர்களும் இருக்கிறார்கள்’’

தமிழகத்தின் முன்னணி வீரர்கள் யார், யார்..?

‘‘சென்னையை விட சேலத்தில் தான் அதிகளவிலான செஸ் பாக்ஸிங் வீரர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் செஸ் பாக்ஸிங் விளையாட்டின் தாய் வீடும் சேலம்தான். சேலத்தில் மூத்த வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் கோபிநாத், கிருபாகரன், ஹரி, சந்தோஷ், வேலூரில் கோகுல், கார்த்திக், துளசி, வெங்கடேஷ் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் குறிப்பிட்ட சீனியர் வீரர்கள் ஆவர். தமிழகம் முழுவதும் சுமார் 250 செஸ் பாக்ஸிங் வீரர்கள் இருக்கிறார்கள்’’ என்கிறார்.

சேலத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு செஸ் பாக்ஸிங் கூட்டமைப்பு, சிறந்த வீரர்களை கண்டறிந்து இலவசப்பயிற்சியுடன், விளையாடுவதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறது.

Next Story