சுகாதார திட்டத்தின்கீழ் இலவச தாய்–சேய் ஊர்தி அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் இலவச தாய்சேய் ஊர்தியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் இலவச தாய்–சேய் ஊர்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் இலவச தாய்–சேய் ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் இந்த தாய்–சேய் ஊர்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவை அரசு மருத்துமனையில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை அவரவர் இருப்பிடத்திற்கு சென்று விடுவதற்கும், அதன் பின்னர் ஓராண்டிற்கு குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசிக்காகவும், சிகிச்சைக்காக வரும் தாய் மற்றும் குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து அவர்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி எண் ‘102‘இந்த சேவைக்காக எந்த ஒரு நபருக்கும் சன்மானம் கொடுக்க தேவையில்லை. இத்திட்டம் முற்றிலும் ஒரு இலவச சேவை திட்டமாகும். இந்த இலவச தாய்–சேய் ஊர்தி திட்டத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சவுந்தரராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மருத்துவத்துறை இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி, சுகாதார துறை துணை இயக்குனர் யசோதாமணி, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மருத்துவ அலுவலர் குழந்தை ஆனந்தன், ரெட் கிராஸ் தலைவர் கேப்டன் அருள்ராஜ் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.