தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் காடிஸ் என்ற காட்வின் மோசஸ் (வயது 26).
குடியாத்தம்,
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் காடிஸ் என்ற காட்வின் மோசஸ் (வயது 26). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அருகே சைனகுண்டா கிராமத்தில் கூலி தொழிலாளி எனக்கூறி வாடகைக்கு குடும்பத்துடன் தங்கியிருந்தார். அப்போது குடியாத்தம் கல்லப்பாடி புதூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடியுள்ளார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பரதராமி சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்வின் மோசஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே ராணிப்பேட்டை, உதயேந்திரம், உமராபாத் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காட்வின் மோசஸை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ராமன், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.