ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆதரவாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் பணிமனைகளை முற்றுகையிட்டு போராட்டம்
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆதரவாக போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர்
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு மாதந்தோறும் 1–ந் தேதியன்றே ஓய்வூதிய தொகையை வழங்கக்கோரி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு கடந்த 16–ந் தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இவர்கள் நேற்றும் 3–வது நாளாக தங்களது குடும்பத்தினருடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீரென போக்குவரத்துக்கழக 2–வது பணிமனையை முற்றுகையிட்டு அதன் நுழைவுவாயிலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து தொழிற்சங்கத்தினரும் முற்றுகை
இந்த போராட்டத்தில் தொ.மு.ச., நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தேசிய முற்போக்கு தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்துகொண்டனர். இவர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் மாதந்தோறும் 1–ந் தேதியன்றே ஓய்வூதியம் வழங்கக்கோரியும், அவர்களுக்கு கடந்த 2013–ம் ஆண்டில் இருந்து கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் அனைத்தையும் உடனே வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தின் காரணமாக பணிமனையில் இருந்து விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களும் மற்றும் சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பணிமனையிலேயே பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதுபோல் டீசல் போடுவதற்காக பணிமனைக்குள் மற்ற பஸ்களும் வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காலை 7 மணியளவில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு பணிமனையில் இருந்து பஸ்கள் அனைத்தும் 2½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றன.
இதேபோல் திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 3 கிளை பணிமனைகள் முன்பு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.