விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு புதிய பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது


விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு புதிய பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 11:46 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு புதிய பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

விழுப்புரம்,

புதிய ரெயில்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக நேற்று புதியதாக ரெயில் இயக்கப்பட்டது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் நேற்று காலை 7.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலைய 6–வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது.

இந்த ரெயிலை ரெயில் நிலைய கண்காணிப்பாளர் சேகர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், தண்டரை, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், அகரம், போளூர், ஆரணிரோடு, கண்ணமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களின் வழியாக காலை 10.30 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தது.

இதேபோல் மறுமார்க்கத்தில் காலை 11.30 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் மாலை 3 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. விழுப்புரம்– வேலூர் இடையே புதிய ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ரெயில் சேவை செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக இயக்கப்படுகிறது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மட்டும் இந்த ரெயில் சேவை இல்லை.

பரிசோதனை முயற்சி

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம்– வேலூர் இடையே பரிசோதனை முயற்சியாகவும், சிறப்பு ரெயிலாகவும் வருகிற 31–ந் தேதி வரை இந்த புதிய ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இது நிரந்தர ரெயிலாக இயக்க வாய்ப்புள்ளது. வேலூர் கண்டோன்மென்ட் வரை திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் வருவதால் ரெயிலை இயக்குவது சுலபமாக இருக்கிறது. பயணிகளின் வரவேற்புக்கு பின் இந்த ரெயில் நிரந்தரமாகும்போது சென்னை மண்டலத்தின் அனுமதியுடன் காட்பாடி வரை ரெயில் இயக்கப்படலாம் என்றார்.


Next Story