மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் மறியல் போராட்டம்


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 2:00 AM IST (Updated: 19 March 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மறியல் போராட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் முழுவதுமாக வழங்கப்படவில்லை என்றும், மாதாந்திர ஓய்வூதிய தொகை 1–ந் தேதி, 15–ந் தேதி எனற இரு தவணைகளாக வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகை இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

எனவே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அரசு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். துத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, நேற்று அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சகாயராஜ், சி.ஐ.டி.யு.வை சேர்ந்த ஜான் கென்னடி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.

இதே போல், தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி–ஸ்ரீவைகுண்டம்

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 26 பேரை கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மற்றொரு மறியல் போராட்டமும் நடந்தது. அதில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் நேற்று அதிகாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க தலைவர் முத்துராமலிங்கம், பொதுச்செயலாளர் சுடலைமுத்து, துணை பொதுச்செயலாளர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 22 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட தொ.மு.ச. செயலாளர் அருணாசலம், ஏ.ஐ.டி.யு.சி. துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.ஐ.டி.யு. தலைவர் சிவகாமன், துணை தலைவர் ஜோதி, செயலாளர் வெங்கலசாமி உள்பட 34 பேரை விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.


Next Story