தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும் சீமான் வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் கூறினார்.
நெல்லை,
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் கூறினார்.
ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களை வெளியேற்ற கோரி நடந்த இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், நெல்லை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், குமரி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிசீலன், இசக்கித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
பிற கட்சிகள் ஆதரவுஇந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் கட்சி கொடியுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். இதேபோல் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் இளஞ்செழியன், தமிழர் நற்பணி கழகம் மதன் உள்ளிட்டோர் தங்களது அமைப்புகளின் நிர்வாகிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முற்றுகை போராட்டம்தமிழகத்தில் உள்ள வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு மட்டுமே. இந்த ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்துச் செல்கிறார்கள். தற்போது மக்களுக்கு குடிக்க குடிநீரும், விவசாயத்துக்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. ஆனால் உபரிநீரை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறி குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்த நீதிமன்றமே, அனுமதியும் வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.
கேரள மாநிலத்தில் இதுபோன்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால் கங்கைகொண்டானில் உள்ள குளிர்பான நிறுவனங்களின் ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
வெளிநாட்டு குளிர்பானங்கள்தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் கடல் நீரை குடிநீராக்கும் எந்திரங்களை நிறுவி தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பொது மக்களின் ஜீவாதாரமாக உள்ள ஆற்று தண்ணீரை உறிஞ்சக்கூடாது. இதற்கு தரகு வேலை பார்க்கும் அரசும், ஆட்சியாளர்களும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தற்போது வியாபாரிகள் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதை தவிர்த்து வருகிறார்கள். பொது மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கி குடிக்க கூடாது. அதற்கு பதிலாக, பதநீர், நுங்கு, பழச்சாறு, கரும்பு சாறு ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். தற்போது பல்வேறு தமிழ் அமைப்பினர் சேர்ந்து போராட்டத்தை தொடங்கி உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த போராட்டம் நடத்தி உள்ளோம். இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால் பெரிய புரட்சியை நடத்துவோம்.
ஆர்.கே.நகரில் போட்டிசென்னை ஆர்.கே.நகர். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர் பெயர் விவரம் நாளை(திங்கட்கிழமை) வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.