கடையம் அருகே சிறுத்தைப்புலி அட்டகாசம்: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பூங்கோதை எம்.எல்.ஏ. ஆறுதல்


கடையம் அருகே சிறுத்தைப்புலி அட்டகாசம்: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பூங்கோதை எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 19 March 2017 2:00 AM IST (Updated: 19 March 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

கடையம் வட்டாரத்தில் அமைந்துள்ள மலையடிவார பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

கடையம்,

கடையம் வட்டாரத்தில் அமைந்துள்ள மலையடிவார பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் பெத்தான்பிள்ளை குடியிருப்பில் ஒரே நாளில் 3 ஆடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து ஆட்டைக்கடித்து தின்று கொண்டிருந்தபோது அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போடவே ரத்தத்தை குடித்துவிட்டு ஆட்டை போட்டுவிட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டமும் நடத்தினர்.

இதனை அறிந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, நேற்று காலையில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதிக்கு சென்றார். சிறுத்தைப்புலியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

பின்னர் கடையம் போலீஸ் நிலையத்தில் நடந்த கலந்தாய்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். உடனடியாக மின்வேலியை சரிசெய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பொதுமக்களிடம் கருத்து கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், வனச்சரகர் இளங்கோ உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


Next Story