காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை: மத்திய அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் மந்திரி பரமேஸ்வர் சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது மத்திய அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என்று மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
மைசூரு,
காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது மத்திய அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் என்று மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
மந்திரி பரமேஸ்வர் பேட்டிநஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 9–ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில போலீஸ் மந்திரியும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று பரமேஸ்வர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக மைசூருவில் நேற்று மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரசை வெற்றியடைய செய்வதற்காக தொகுதிகளில் உள்ள கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறும்படி தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசுக்கு அவப்பெயர்முதல்–மந்திரி சித்தராமையா இந்த ஆண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தகுந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். அதனால் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடையும். தொகுதிகளில் வாக்குகள் சேகரிக்க மந்திரிகள், மேல்–சபை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், நியமிக்கப்பட்டு உள்ளார்கள். மேலிட உத்தரவு வந்த உடன் வேட்பாளர்களுக்கு ‘பி‘ பாரம் கொடுக்கப்படும். 21–ந் தேதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
மந்திரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த உள்ளது குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. மத்திய அரசு தனது கடமையை செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதை மக்களும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது மத்திய அரசுக்கு தான் அவப்பெயரை உண்டாக்கும்.
கடும் நடவடிக்கைமேலும் முன்னாள் எம்.பி. விஸ்வநாத், ஜனார்த்தன பூஜாரி, ஏ.பி.இப்ராகிம் ஆகிய 3 பேரும் கட்சியை அவமதிக்கும் வகையில் பேசியதால் தான் அவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பினேன். அதற்கு விஸ்வநாத்தும் பதில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பி உள்ளோம். மேலிடம் உத்தரவின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாநிலத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து உள்ளோம். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.