பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை வறண்டு கிடக்கும் கவிநாடு கண்மாய்


பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை வறண்டு கிடக்கும் கவிநாடு கண்மாய்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் கவிநாடு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மன்னர் காலத்தில் வெட்டப்பட்டது. இந்த கண்மாய் சுமார் 400 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதிகளை கொண்டது.

இந்த கண்மாய் நிரம்பி விட்டால் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த கண்மாயில் இருந்து வெளியேறும் உபரிநீர் குண்டாறு வழியாக வெள்ளாற்றில் கலக்கும்.

சீமை கருவேல மரங்கள்

இந்த கண்மாய் மூலமாக சுமார் 860 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வறட்சியின் காரணமாகவும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் போடப்பட்டதன் காரணமாகவும், மேலும் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ததன் விளைவாகவும் தற்போது சுமார் 400 ஏக்கர் பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் 100 ஏக்கருக்கும் குறைவான அளவிலேயே சாகுபடி செய்யப்படும் நிலை ஏற்படலாம்.

இந்த கண்மாய் கரை புதுக்கோட்டையில் ஆரம்பித்து பூசத்துறை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை நீளம் கொண்டது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி இந்த கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையளவு குறைந்து கொண்டே வருவதால், இந்த கண்மாய் தண்ணீரால் நிரம்பி 8 ஆண்டுகள் ஆகிறது.

நிலத்தடி நீர்மட்டம்

அந்த காலத்தில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வந்த வண்ணம் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், வாய்க்கால்கள் தூர் வாராமல் கிடப்பதாலும் மழைநீர் கவிநாடு கண்மாய்க்கு வருவதில்லை. இந்த கண்மாயில் தற்போது தண்ணீர் இல்லாததால் கண்மாய் அருகே உள்ள கட்டியாவயல், பெருமாநாடு, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தற்போது சில கண்மாய்களில் ஆடு, மாடுகள் குடிப்பதற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஒரு காலத்தில் மழை காலங்களில் மணப்பாறையில் உள்ள குளங்கள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் வரத்து வாரிகள் மூலம் இந்த கண்மாயை வந்தடையும் வகையில் வரத்து வாரிகள் இருந்தன.

ஆடு, மாடுகள் குடிப்பதற்கு...

ஆனால் தற்போது பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற வரத்து வாரிகள் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஆக்கிரமிப்புகளில் சிக்கி தற்போது முற்றிலும் அழிந்து விட்டது. இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில குளங்களில் ஆடு, மாடுகள் குடிப்பதற்கு மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் கவிநாடு கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் வரத்துவாரிகள் தூர் வாரப்படாததாலும், மழை காலங்களில் கண்மாய்க்கு வரும் மழை நீர் வரத்து குறைந்ததாலும் தற்போது கவிநாடு கண்மாய் வறண்டு காணப் படுகிறது. இந்த கவிநாடு கண்மாயில் மட்டும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஒரு காலத்தில் கடல் போல் இருந்த கவிநாடு கண்மாய் தற்போது சிறிதளவு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர் வடிநிலவள பகுதிகளில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் அக்னியாறு, வெள்ளாறு, அம்புலி ஆறு, மற்றும் பாம்பாறுகள் உள்ளன. இதில் அக்னி ஆற்றில் 7 தடுப்பணைகளும், வெள்ளாற்றில் 14 தடுப்பணைகளும், அம்புலி ஆற்றில் 9 தடுப்பணைகளும், பாம்பாற்றில் 3 தடுப்பணைகளும் உள்ளன. மேலும் இந்த தடுப்பணைகளில் இருந்து பாசனம் பெறும் குளங்கள் மொத்தம் 532 ஆகும். இந்த குளங்களில் இருந்து சுமார் 32 ஆயிரம் எக்டர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால் தற்போது குளங்களுக்கு வரும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளாலும், பல்வேறு இடங்களில் தூர்வாரப்படாததாலும் வரத்து வாரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. இதனால் எந்த குளங்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் விவசாயம் அழிந்து வருகிறது. அதோடு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து புதுக்கோட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 

Next Story