வறட்சியால் கடனை செலுத்த முடியாத காரணத்தால் அசல், வட்டி நிலுவைத்தொகையில் 40 சதவீதம் தள்ளுபடி


வறட்சியால் கடனை செலுத்த முடியாத காரணத்தால் அசல், வட்டி நிலுவைத்தொகையில் 40 சதவீதம் தள்ளுபடி
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் கடனை செலுத்த முடியாத காரணத்தால் அசல், வட்டி நிலுவைத்தொகையில் விவசாயிகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடி திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவிற்கு தஞ்சை மண்டல மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.

விழாவில் பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்டார முதன்மை பொது மேலாளர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு 3 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களை வழங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தஞ்சை மண்டல மேலாளர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாரத ஸ்டேட் வங்கி தனது நிகரலாபத்தில் ஒரு பகுதியை சமுதாய முன்னேற்றத்துக்காக ஏழை, எளிய மக்களுக்கு செலவு செய்து வருகிறது. அதன்படி தஞ்சை மண்டலம் சார்பில் வேளாங்கண்ணியில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.11 லட்சம் செலவில் சோலார் விளக்கு வசதியும், ஆரோக்கிய அன்னை காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் சமையல் உபகரணங்கள், மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு கணினிகள், மின்விசிறி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, கோவில் பணிக்கு பல்வேறு உதவிகள் என இந்த ஆண்டு மட்டும் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளோம்.

சலுகை


தற்போது வறட்சியால் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு உரிய தவணைத்தொகையை செலுத்த முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை தீர்வு திட்டத்தின் கீழ் அசல், வட்டி நிலுவைத்தொகையில் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விவசாயிகள் தங்களுடைய கணக்கை முடித்துக்கொண்டு சொத்து பத்திரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகையை பாரத ஸ்டேட் வங்கி தான் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டம் வருகிற 31–ந்தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. இதே போல் கல்விக்கடனை பல்வேறு காரணங்களால் செலுத்த முடியாதவர்கள் கடன் சலுகை திட்டத்தின் கீழ் அதனை முடித்துக்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story